சில்லறை மாத்தும் திமுக அரசு; நக்கலடிக்கும் திமுக மூத்த அமைச்சர்கள்

 
a

 திமுகவின் மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி வருவது  பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  பேருந்தில் இலவச பயணம் செல்லும்  பெண்களைப் பார்த்து ‘ஓசி பயணம்’ செய்பவர்கள் என்று ஏளனம் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.  இது பெரும் சர்ச்சையாகி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து,  ‘சில்லரை மாத்திக்கிட்டு இருக்கோம்.. சீக்கிரம் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுவோம்’ என்று நக்கல் அடித்திருக்கிறார். துரைமுருகனின் இந்த பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

du

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் மிக முக்கியமானது,  பொதுமக்கள்.. குறிப்பாக இல்லத்தரசிகள் அதிகம் எதிர்பார்த்தது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தான்.  ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்கள் ஆகியும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை . அதற்கு பல்வேறு காரணங்களை சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  ‘விரைவில்’ அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக திமுக அமைச்சர்கள் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.   ஆனாலும் மக்களுக்கு இன்னமும் அந்த திட்டம் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

 இந்த நிலையில் மூத்த அமைச்சர் துரைமுருகன்,  சில்லரை மாத்திக்கிட்டு இருக்கோம் சீக்கிரம் கொடுத்திடுவோம் என்று சொல்லி நக்கல் அடித்து இருப்பது பெண்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. 

 வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னையாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணியை தொடங்கி தொடங்கி வைத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,    அப்போது பேசிய போது,   எங்கள் ஆட்சியில் யார் யாருக்கு எவ்வளவு செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம்.  ஹை ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருக்கிற பெண் காலேஜ் போனால் அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம்.  செலவுக்கு அவர் பெற்றோரிடம் கேட்கத் தேவையே இல்லை என்றார்.

p

 தொடர்ந்து பேசிய துரைமுருகன்,   பெண் பிள்ளைகளின் அம்மாக்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம்.  அதற்காகத்தான் சில்லரை மாத்திக்கிட்டு இருக்கிறோம். கவலைப்படாதீங்க சொன்னபடி கொடுத்திடுவோம்.  அம்மாவுக்கு ஆயிரம் பொண்ணுக்கு ஆயிரம்.  இப்படி இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கிற ஒரே ஆட்சி இந்த ஆட்சி தான் என்றார். 

 மற்ற அமைச்சர்களை போலவே விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று சொன்னால் , ஏமாற்றினால் கூட மக்கள் கவலைப்பட போவதில்லை. ஆனால் சில்லறை மாத்திக்கிட்டு இருக்கோம் சீக்கிரம் கொடுத்திடுவோம் என்று துரைமுருகன் சொன்னது நக்கல் அடிக்கும் விதமாக இருக்கிறது என்று பெண்கள் கொதித்தெழுந்துள்ளனர்.  நெட்டிசன்களும் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இவர்கள் வாய்களுக்குத் திண்டுக்கல் பூட்டு போட வேண்டிய நேரம் வந்தாச்சு. இவர்கள் பாஜகவுக்கு விலைக்குப் போய்விட்டார்களோ என்று சந்தேகமா இருக்கு. இப்படிப் பேசினால் கெட்ட பேர் வரும்னு தெரியும். தெரிஞ்சும் இப்படிப் பேசினால்? அமைச்சர் பதவியைக் கழட்டினால் அடங்குவார்கள் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.