தயாரானது தனித்தீர்மானம்! அவர் சொன்ன நேரத்தில்!

நாளை மறுதினம் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக இருபத்தி மூன்று தீர்மானங்களை தயார் செய்துள்ளனர் 12 பேர் கொண்ட தீர்மான குழுவினர். தயார் செய்திருக்கும் இந்த இருபத்திமூன்று தீர்மானங்களில் ஒற்றை தலைமை தீர்மானம் இல்லை. இதனால் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட போவதில்லையா என்றால், ’அதுதான் இல்லை’ என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.
இருபத்தி மூன்று தீர்மானங்கள் இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை தயார் செய்து வைத்துள்ளார்களாம். இருபத்தி மூன்று தீர்மானங்களும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இருவரின் ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினர் தான் இந்த தீர்மானங்களை தயார் செய்து உள்ளனர் . ஆனால், ஒற்றை தலைமை தனித்தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தயார் செய்துள்ளனர் என்று தகவல்.
அதுவும் ஜோதிடர் குறித்த நேரத்தில் தயார் செய்துள்ளனர் என்று தகவல். பொதுவாகவே அதிமுகவிற்கு தீர்மானத்தை இன்றையதினம் அதாவது இருபத்தி ஒன்றாம் தேதியன்று தயார் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கணித்து கொடுத்துள்ளனர். அதன்படி தான் இன்றைக்கு இருபத்தி மூன்று தீர்மானங்களை தயார் செய்துள்ளனர். அதிலும் இன்றைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தனித் தீர்மானத்தை தயார் செய்தால் எடப்பாடிக்கு அது சாதகமாக அமையும். சுமூகமாக எந்தவித இடையூறும் இல்லாமல் அந்த தனித் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறும் என்று ஜோதிடர் கணித்துக் கொடுத்திருக்கிறார்.
ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துச் சொன்ன அந்த நேரமான 11. 10 முதல் 11. 40 மணிக்குள் இந்தத் தீர்மானத்தை எடப்பாடி ஆதரவாளர்கள் தயார் செய்துள்ளனர் என்று தகவல் . ஆனால் இந்த ஒற்றை தலைமை தனித்தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்றினால் அது செல்லுபடியாகுமா ஆகாதா என்பது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது என்கிறார்கள். ஒற்றை தலைமை தனது தீர்மானத்தை கொண்டு வந்தால் அதற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது என்கிறார்கள்.