மம்தா தலைமையின் கீழ், சட்டமற்ற மற்றும் திவாலான மாநிலமாக மேற்கு வங்கம் மாறியுள்ளது... ரவி சங்கர் பிரசாத்

 
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் தலைமை செயலகத்தை நோக்கி பா.ஜ.க. நடத்திய பேரணியில் அந்த கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை குறிப்பிட்டு, மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ்,  சட்டமற்ற மற்றும் திவாலான மாநிலமாக மேற்கு வங்கம் மாறியுள்ளது என்று ரவி சங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு  ஊழலில் திளைப்பதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டி, செப்டம்பர் 13ம் தேதி கொல்கத்தா மற்றும் ஹௌராவில் பல இடங்களில் இருந்து அம்மாநில தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.க. அறிவித்தது. பா.ஜ.க. திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் பேரணியை தொடங்கியது. அதேசமயம் பா.ஜ.க.வின் பேரணியை தடுப்பதற்காக அம்மாநில போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். பேரணியை பல இடங்களில் வழிநடத்திய பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து ஆதிகாரி, பா.ஜ.க. எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜ.க. பேரணியில் வன்முறை

மேலும் பல இடங்களில் தடுப்புகளை மீறி பேரணி நடத்த முயன்ற பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல், போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடிநடத்தியும் போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக காட்சியளித்தன. பா.ஜ.க. தொண்டர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து அம்மாநில பா.ஜ.க. தலைவர் மஜூம்தார் கூறுகையில், மாநில அரசின் கைப்பாவையாக போலீசார் செயல்படுகின்றனர்  என குற்றம் சாட்டினார்.

ரவி சங்கர் பிரசாத்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நேற்று (நேற்று முன்தினம்) மிருகத்தனம் மற்றும் அரசியல் உள்வன்முறையின் அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டது. வங்காளம் என்பது அறிவுசார் பாரம்பரியம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் பரந்த பகுதி. ஆனால், மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ், அது சட்டமற்ற மற்றும் திவாலான மாநிலமாக மாறியுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அவர் மேற்கு வங்கத்தை வெளியே ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றி பேசுகிறார். ஆனால் மாநிலத்துக்குள், ஜனநாயக உரிமைகளை தாக்குவதில் அவர் அனைத்து வரம்புகளையும் மீறுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.