பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி இப்போது மன்னிப்பு கூறுவாரா?.. பா.ஜ.க. கேள்வி
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரி தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை குறிப்பிட்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி இப்போது மன்னிப்பு கூறுவாரா? என்று பா.ஜ.க.வின் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கருப்பு பணத்தை ஒழிப்பு, ஊழலை தடுத்தல், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழித்தல் போன்ற நோக்கங்களுக்காக, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. மேலும், மக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ள காலஅவகாசமும் வழங்கியது. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் பல அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் சிரமத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தன. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பலர் வழக்குகளை தொடர்ந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பை நேற்று வழங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரி என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர், இது சரியான நடவடிக்கை இல்லை என்று நீதிபதி நாகரத்னா எதிராக தீர்ப்பு வழங்கினார். பெரும்பான்மை அடிப்படையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்டு, ராகுல் காந்தி இப்போது மன்னிப்பு கேட்பாரா என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இது (பணமதிப்பிழப்பு நடவடிக்கை) ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு மற்றும் தேசிய நலன் சார்ந்தது.
தேசிய நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி இப்போது மன்னிப்பு கூறுவாரா?. வெளிநாட்டிலும் அவர் அதற்கு எதிராக பேசினார். அவர்கள் (ப.சிதம்பரம்) பெரும்பான்மையின் தீர்ப்பை புறக்கணித்து நியாயமற்ற மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். கருத்து வேறுபாடுள்ள நீதிபதியும் கொள்கை நல்ல நோக்கத்துடன் இருப்பதாக தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அதிகரித்துள்ள டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் மட்டும் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.