நாடு இப்போது ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, நேர்மை, திறமையான தலைமையை விரும்புகிறது... அகிலேஷூக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 
ரவி சங்கர் பிரசாத்

நாடு இப்போது ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, நேர்மை மற்றும் திறமையான தலைமையை விரும்புகிறது என்று அகிலேஷ் யாதவுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் நிகழ்வு (நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறி, மெகா கூட்டணி ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்தது) நாட்டின் அரசியலுக்கு நேர்மறையான அறிகுறியாகும். 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அரசியல் மாற்று உருவாகும். மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் அத்தகைய மாற்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ்
2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மாற்று கூட்டணி உருவாகும் என்ற அகிலேஷ் யாதவின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: மத்தியில் குறுகிய கால கூட்டணி அரசாங்களுக்கு தலைமை தாங்கிய தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், வி.பி.சிங் ஆகியோரின் சகாப்தம் போய்விட்டது என்பது இந்திய மக்களுக்கு தெரியும். 

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற தேவகவுடா….

நாடு இப்போது ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, நேர்மை மற்றும் திறமையான தலைமையை விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி அதை வழங்கி இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளார். 2024 வெகு தொலைவில் உள்ளது, எதிர்க்கட்சிகளுக்கு இடையே எந்தளவு புரிதல் உருவாகிறது என்பதைப் பார்ப்போம். இது பா.ஜ.க.வின் போட்டியாளர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒற்றுமையின்மைக்கான வெளிபடையான குறிப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.