பதவி வெறி பிடித்தவர்களால் அதிமுகவில் குழப்பம்- ஓபிஎஸ் ஆதரவாளர் ரத்தின சபாபதி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது, சில பதவி வெறி பிடித்தவர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரெத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அமைதி ஊர்வலத்தில் அதிமுகவினர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரெத்தினசபாபதி. “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுத்து உறங்கிய கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் ஆசை. அதிமுக தொண்டர்களின் எண்ணம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது, சில பதவி வெறி பிடித்தவர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.விரைவில் குழப்பங்கள் எல்லாம் மறைந்து ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்து ஜெயலலிதாவின் ஆட்சி அமைப்போம். வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் பழையபடி ஒருங்கிணைந்த அதிமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.