மகாராஷ்டிராவில் பா.ஜ.க. இன்னும் 2 முதல் 3 தினங்கள் மட்டுமே எதிர்க்கட்சியாக இருக்கும்.. மத்திய அமைச்சர் பேச்சு

 
ராவ் சாகேப் தன்வே

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. இன்னும் 2 முதல் 3 தினங்கள் மட்டுமே எதிர்க்கட்சியாக இருக்கும் என மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. இன்னும் 2 முதல் 3 தினங்கள் மட்டுமே எதிர்க்கட்சியாக இருக்கும் என மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.


மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் வேளாண் துறையின் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ரயில்வே துறை இணையமைச்சர் ராவ்சாகேப் தன்வே, மகாராஷ்டிரா அமைச்சர் ராஜேஷ் தோப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே பேசுகையில் கூறியதாவது: நான் மத்திய அரசில் அமைச்சராக உள்ளேன். ராஜேஷ் தோப் சாஹேப் மாநிலத்தில் அமைச்சராக உள்ளார். நான் இரண்டரை ஆண்டுகளாக அமைச்சராக உள்ளேன். 

ராஜேஷ் தோப்

14 ஆண்டுகளில் நீங்கள் எதை செய்தீர்களோ, என்ன செய்ய மீதியுள்ளதோ அதை விரைவாக செய்யுங்கள். நேரம் ஆகி விட்டது. எதிர்காலத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டுமானால் அதை பற்றி சிந்திக்கலாம். ஆனால் மாவட்டத்தில் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. நான் (பா.ஜ.க.) இன்னும் 2 முதல் 3 நாட்களுக்கு மட்டுமே எதிர்க்கட்சியாக இருப்பேன் (இருக்கும்), எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் உங்கள் முன் எனது கருத்தை முன்வைப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.