ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாததால், மோடி அரசு அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாததால், அரசாங்கம் (பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு) அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப பெற்று வருவது, அன்னிய செலாவணி அதிகளவில் வெளியேறுவது, அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சுமார் 80ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை குறிப்பிட்டு மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டிவிட்டரில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாததால், அரசாங்கம் (பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு) அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது. இப்போது ரூபாய் மதிப்பு மார்கதர்ஷக் மண்டலின் (மார்கதர்ஷக் மண்டல் என்பது பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களை கொண்ட வழிகாட்டல் குழு) வயதை கடந்து விட்டது என பதிவு செய்து இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில், 2013ல் (வளர்ந்து வரும் சந்தைகளை மந்தநிலை தாக்கியபோது) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இருந்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ரூபாயின் மதிப்பை 69லிருந்து ரூ.58க்கு 4 மாதங்களுக்குள் கொண்டு வந்தது. மேலும், 2012-13ல் 5.1 சதவீதத்தில் இருந்த ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி விகிதத்தை 2013-14ல் 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலே உள்ள அனைத்தும் சமீபத்திய வரலாறாகும், இது பா.ஜ.க. அரசுக்கு வெறுப்பானது என பதிவு செய்துள்ளார்.