மோடி ஜி, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறு எல்லா மாநிலங்களையும் வலியுறுத்துவோம்.. சுர்ஜேவாலா

 
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

மோடி ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 2014 மே-க்கு முந்தைய அளவுக்கு குறைக்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்துவோம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது முதல்வர்களிடம், கடந்த ஆண்டு நவம்பரில் எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்தது. இதனையடுத்து பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. நான் யாரையும் விமர்ச்சிக்கவில்லை. ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இப்போது வாட் வரியை குறைத்து மக்களுக்கு பலன்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

மோடி

பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள்  கடுமையாக பொங்கின. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், மோடி ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 2014 மே-க்கு முந்தைய அளவுக்கு குறைக்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்துவோம். பா.ஜ.க. அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் ரூ.27 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என்பதை தயவு செய்து ஒப்புக் கொள்ளுங்கள். அதேவேளையில், அனைத்து மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் வாயிலாக மொத்தம் ரூ.16.5 லட்சம் கோடி மட்டுமே ஈட்டியுள்ளன. பெட்ரோல் டீசல் மூலமான மத்திய அரசின் வருவாய் கடந்த 8 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது என தெரிவித்தார். ஜார்க்கண்ட் சுகாதார துறை அமைச்சர் ரானா குப்தா கூறுகையில், பிரதமர் இன்று (நேற்று) உடல் நலத்தை விட பெட்ரோல்-டீசல் பற்றி அதிகம் பேசினார். கூட்டம் அரசியல் கூட்டமாக மாறியது. பிரதமர் மோடி இவற்றை (பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு) ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வந்து நாட்டுக்கு ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தீபேந்தர் எஸ் ஹூடா கூறுகையில், ஹரியானாவில் பெட்ரோல்-டீசல் மீது வாட் வரி அதிகமாக உள்ளது. சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் ஆனால் சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரிக்கும்போது, விவசாயிகளுக்கு கூடுதல் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காது. எரிபொருள் விலை உயர்வு மீதான கடமையிலிருந்து மத்திய அரசு நழுவுகிறது என தெரிவித்தார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் பிரதமர் மோடி (மத்திய அரசு) ரூ.26 லட்சம் கோடி சம்பாதித்துள்ளார். ஆனால் அதை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. நீங்கள் சரியான நேரத்தில் ஜி.எஸ்.டி. பங்கை மாநிலங்களுக்கு வழங்கவில்லை. மேலும் வாட் வரியை மேலும் குறைக்குமாறு மாநிலங்களை நீங்கள் கேட்கிறீர்கள். அவர்கள் மத்திய கலால் வரியை குறைத்து விட்டு மற்றவர்களை வாட் குறைக்க சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.