ராகுலிடம் விசாரணை.. இன்று நாடு முழுவதும் கவர்னர் மாளிகைகள் முற்றுகையிட்டு போராட்டம்.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடு முழுவதும் கவர்னர் மாளிகைகள் முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதேசமயம், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து அந்த கட்சி தொண்டர்களை டெல்லி போலீசார் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதனை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. 

காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி போலீசார் இன்று (நேற்று) காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து தொண்டர்களை தாக்கினர். இது ஒரு கிரிமினல் அத்துமீறல். அவர்களின் (டெல்லி போலீசார்) குண்டர்வாதம் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இது பொறுத்துக்கொள்ளப்படாது, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

எப்.ஐ.ஆர். பதிவு செய்து, அவர்களை இடைநீக்கம் செய்து, ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாளை (இன்று) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கவர்னர் மாளிகைகளையும் காங்கிரஸ் முற்றுகை செய்யும். நாளை மறுநாள் (நாளை) அனைத்து மாவட்ட அளவிலும் போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.