சிவ சேனாவில் நடக்கும் சம்பவங்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ராம்தாஸ் அதவாலே

 
வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்… ராம்தாஸ் அதவாலே எச்சரிக்கை

சிவ  சேனாவில் நடக்கும் சம்பவங்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த  தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். 


பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே நேற்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். அதன் பிறகு ராம்தாஸ் அதவாலே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அரசாங்கம் அமைப்பது பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. வரும் காலத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். 

தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸூடன் பேசினே். சிவ சேனாவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் என்னிடம் கூறினார். உத்தவ் தாக்கரேவும், ஏக்நாத் ஷிண்டேவும் அவர்களுக்கிடையேயான பிரச்சினையை அவர்களே தீர்த்து கொள்வார்கள். சிவ சேனாவை விட்டு ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிய நிலையில், சரத் பவார், அஜித் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ரவுத் ஆகியோர் எப்படி பெரும்பான்மையை காட்டுவோம் என்று கூறுகிறார்கள். ஏக்நாத் ஷிண்டேவுக்கு 37 சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 7 முதல் 8 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்  ஆதரவு உள்ளதால், அதை (பெரும்பான்மை உள்ளது) எப்படி கூறுவீர்கள். 

ஏக்நாத் ஷிண்டே

சேனா கட்சியினர் மிரட்டலில் ஈடுபட்டால், நாங்கள் அதே வழியில் எதிர்வினையாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அந்த கட்சியை சேர்ந்த சுமார்  42 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் சிவ சேனா பிளவு ஏற்படும் என கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.