டிக்கைட் குடும்பத்தையும், சங்கத்தையும் உடைக்க அரசாங்கம் என்னை கொல்ல விரும்புகிறது... ராகேஷ் டிக்கைட் குற்றச்சாட்டு

 
ராகேஷ் டிக்கைட்

டிக்கைட் குடும்பத்தையும், சங்கத்தையும் உடைக்க அரசாங்கம் என்னை கொல்ல விரும்புகிறது என ராகேஷ் டிக்கைட் குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஜாங்கேதி கிராமத்தில் உள்ள தர்மேஸ்வரி பண்ணையில் பாரதி கிசான் சங்கத்தின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செய்தி  தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் பேசுகையில் கூறியதாவது: கர்நாடகாவில் என் மீதான மை வீச்சு தாக்குதல் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட சதி. டிக்கைட் குடும்பத்தையும், சங்கத்தையும் உடைக்க அரசாங்கம் என்னை கொல்ல விரும்புகிறது. ஆனால் இது ஒரு போதும் நடக்காது. 

காந்தி

மகாத்மா காந்தியை சதிகாரர்கள் சுட்டுக் கொன்றது போல், நாட்டுக்காகவும், நாட்டின் விவசாயிகளுக்காகவும் குரல் எழுப்புபவர்கள் சதிகாரர்களின் இலக்கில் உள்ளனர். ஒரு டிக்கைட்டுக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால், நாட்டில் இன்குலாபி கொடியை உயர்த்த லட்சக்கணக்கான டிக்கைட்டுகள் தயாராக உள்ளனர். பாரதிய கிசான் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க மத்திய அரசு கடுமையாக முயற்சி செய்கிறது. ஆனால் சங்கத்தின் ஒற்றுமை காரணமாக அது முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மை வீசி தாக்கப்பட்ட ராகேஷ் டிக்கைட்

கடந்த மே 30ம் தேதியன்று பெங்களூருவில் ராகேஷ் டிக்கைட் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.  அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பத்திரிகையாளர்கள் காட்டி கொண்டு உள்ளே வந்த 3 பேர் ராகேஷ் டிக்கைட்டை தாக்கினர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மைக்ரோனை சரி செய்வதற்காக மேடையில் ஏறி, மைக்கைக் கொண்டு டிக்கைட்டை தாக்கினார் மற்றொருவர் ராகேஷ் டிக்கைட் மீது மை வீசினார். மேலும் அவர்கள் மோடி, மோடி என கோஷம் எழுப்பினர்.