இந்திய அரசியலில் நம்பகத்தன்மையின் அடையாளமாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது... ராஜ்நாத் சிங் பெருமிதம்
இந்திய அரசியலில் நம்பகத்தன்மையின் அடையாளமாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங் பெருமிதமாக தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது: காங்கிரஸ் தனது இருப்புக்காக தேர்தலில் போராடி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது இருப்பை பதிவு செய்ய களத்தில் உள்ளது. ஆனால் பல அரசியல் ஆய்வாளர்கள் கணித்தபடி குஜராத்தில் 182 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பா.ஜ.க. கைப்பற்றும்.
பல ஆண்டுகளாக பா.ஜ.க. மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்தது. பா.ஜ.க. முந்தைய அனைத்து சாதனைகளையும் (குஜராத் தேர்தல் வெற்றி) முறியடிக்கும். குஜராத்தில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும். இந்திய அரசியலில் நம்பகத்தன்மை நெருக்கடியை ஏற்படுத்திய அரசியல் கட்சி என்றால் அது காங்கிரஸ்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் வாக்குறுதியளித்தற்கும் கடந்த காலத்தில் அவர்கள் செய்ததற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
மற்ற அனைத்து கட்சிகளும் நம்பகத்தன்மை நெருக்கடியை சந்திக்கும்போது, இந்திய அரசியலில் நம்பகத்தன்மையின் அடையாளமாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. 2014ல் மோடி ஜி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, உலக அளவில் நமது நாட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஜனசங்கம் உருவான நாளிலிருந்தே பொதுசிவில் சட்டம் குறித்து கட்சியின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் அவ்வப்போது எங்கள் நிலைப்பாட்டை மாற்றுவதில்லை, எந்த முடிவையும் எடுக்கும்போது பார்வை மற்றும் அரசியலைக் கருத்தில் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.