மோடி பிரதமரான பிறகு, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.. ராஜ்நாத் சிங்

 
ராஜ்நாத் சிங்

மோடி பிரதமரான பிறகு, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்காக பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள் அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜ்நாத் சிங் இமாச்சல பிரதேசம் சோலனில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது: அரசியலில் தலைவர்களை பொதுமக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

மோடி

இன்று உலக மன்றத்தில் இந்தியா ஏதாவது சொன்னால், மற்ற நாடுகள் இந்தியா சொல்வதை கவனமாக கேட்கின்றன. மோடி பிரதமரான பிறகு, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று உலகின் எந்த சக்தியாலும் நாட்டின் மரியாதையை பாதிக்க முடியாது, அது பிரதமர் நரேந்திர மோடியின் ஆதிக்கம் மட்டுமே நாட்டுக்கு பலத்தை அளித்துள்ளது. முன்பு டாங்கிகள், துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் மற்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி வந்த பிறகு, நாடு தன்னிறைவு பெற்றுள்ளது. இப்போது இங்குதான் டாங்கிகள் பீரங்கிகள், வெடிமருந்துகள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. 

காங்கிரஸ்

முன்பு வெளியில் இருந்து வாங்கினோம் இப்போது இங்கு இருந்து ஆயுத பீரங்கிகள் உலகுக்கு வழங்கப்படுகின்றன. உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அனைவரையும் (அனைத்து நாடுகள்) தாக்கியது. ஆனால் நாட்டை பலவீனப்படுத்த நாங்கள் விடவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. ஆனால் நாங்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) பணவீக்கத்தை ஒற்றை இலக்கில் நிறுத்தியுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் உலக அளவில் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களுக்குள் இந்தியா வரும். இதற்காக பா.ஜ.க. பாடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.