அடுத்து ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும் நான் தான் முதல்வர்.. சச்சின் பைலட்டுக்கு ஷாக் கொடுத்த அசோக் கெலாட்

 
அசோக் கெலாட்

ராஜஸ்தானில் இந்த முறை பொதுமக்கள் மத்தியில் வெறுப்போ, அரசு மீது அதிருப்தியோ இல்லை,முன்பு இருந்த மோடி அலையோ இல்லை. மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் உள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், அந்த கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுகிறது. ராஜஸ்தான் சடடப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சச்சின் பைலட் பேட்டி ஒன்றில், 201302018 காலத்தில் எனது தலைமையிலான மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் போராட்டத்தால் தான் மாநிலத்தில் காங்கிரஸ் அமைத்தது என்று தெரிவித்தார்.

சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

தன்னால் தான் ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது என்ற வகையில் சச்சின் பைலட் பேசியது முதல்வர் அசோக் கெலாட்டுக்கு அதிருப்தி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று கூறியதாவது: 2013ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு மோடி அலை தான் காரணம். ஆனால் ராஜஸ்தானில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து விட்டனர். அதனால் ஒரு சூழல் உருவானது. அதுவே காங்கிரஸ் (2018ல்) மீண்டும் வருவதற்கு ஒரு பெரிய காரணம். கட்சி தொண்டர்கள் தெருவில் இறங்கி போராடுவது போன்ற பிற காரணங்கள் (ஆட்சிக்கு வருவதற்கு) எப்போதும்  உள்ளன. ஆனால் முக்கிய காரணம் அது மக்கள் மனதில் இருந்தது. 

பா.ஜ.க.

2013ல் அரசாங்கத்தை மாற்றியதன் மூலம் அவர்கள் (ராஜஸ்தான் மக்கள்) தவறு செய்து விட்டார்கள். எங்கள் பாதை தெளிவாக உள்ளது. 1998ல் எங்கள் அரசாங்கம் வந்தபோது, 156 இடங்கள் இருந்தது. அப்போது நான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தேன். மிஷன் 156 உடன் முன்னேற விரும்புகிறேன். நாங்கள் ஏற்கனவே அந்த திசையில் பணிகளை தொடங்கினோம். நான் பேசும்போது யோசித்துவிட்டுத்தான் பேசுவேன். எதையும் யோசிக்காமல் பேசுவதில்லை. பேசும்போது இதயத்தின் குரல் நாவில் வருவது கடவுள் எனக்கு கொடுத்த வரம். இந்த முறை பொதுமக்கள் மத்தியில் வெறுப்போ, அரசு மீது அதிருப்தியோ இல்லை,முன்பு இருந்த மோடி அலையோ இல்லை. மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.