நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.. ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட்-சச்சின் பைலட்

 
அசோக் கெலாட்,  வேணுகோபால், சச்சின் பைலட்

நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் நேற்று ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

ராஜஸ்தான் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து ஆலோசிக்க ஒரு கூட்டம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட அந்த கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முதல்வருமான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிவடைந்தபிறகு கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வேணுகோபாலுக்கு இருபுறமும் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் கைகட்டி நின்று ராஜ்தான் காங்கிரஸ ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தினர்.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ராகுல் காந்தி அவர்கள் இருவரும் (சச்சின் பைலட் மற்றும் நான்) சொத்துக்கள் என்று கூறியிருந்தால், நாங்கள் சொத்துக்கள். ஒவ்வொரு தொண்டனும் ஒரு சொத்து. நாங்கள் ஒன்றாக இணைந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணததை வெற்றி பெறச் செய்வோம். மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பதால் 2023 சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். மேலும் சூழ்நிலை எங்களுக்கு சாதகமாக உள்ளது. நாடு பணவீக்கம் மற்றும் அதிக வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 

பா.ஜ.க.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் பதற்றத்தை சமாளிப்பது சவாலாக உள்ளது. ராகுல் காந்தியின் செய்தியை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது. அதற்கு எதிராக மக்களை பா.ஜ.க. தூண்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சச்சின் பைலட் கூறுகையில், ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானில் அதிகபட்ச உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் வரவேற்கப்படும். நடைப்பயணம் மாநிலத்தில் 12 நாட்கள் நடைபெறும். அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வரலாற்று சிறப்புமிக்க யாத்திரையாக இது இருக்கும் என தெரிவித்தார்.