டெய்லர் படுகொலை விவகாரம்.. பிரதமரும், அமித் ஷாவும் ஏன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை?.. அசோக் கெலாட்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த டெய்லர் படுகொலை விவகாரம் தொடர்பாக பிரதமரும், அமித் ஷாவும் என் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பினார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில போஸ்ட் போட்டதற்காக டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த மாநிலத்தில் போராட்டம் வெடித்தது.இந்நிலையில், டெய்லர் படுகொலை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உரையாற்ற வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இது ஒரு சோகமான மற்றும் அவமானகரமான சம்பவம். இன்று நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பிரதமரும், அமித் ஷாவும் ஏன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை? மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. பிரதமர் மோடி பொதுமக்களிடம் உரையாற்றி, இது போன்ற வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அமைதியாக காக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் கூற வேண்டும். இது மிகவும் வருத்தமான சம்பவம். இது ஒரு சிறிய சம்பவம் அல்ல, நடந்தது கற்பனைக்கு அப்பாற்பட்டது, குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லராக இருப்பவர் கண்ணையா லால். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், நுபுர் சர்மாவின் புகைப்படத்தை முகநூல் முகப்புப் படமாக வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று இரண்டு முஸ்லிம் நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை செய்வதற்கு முன்பும் பின்பும் அதை வீடியோவாக எடுத்து கொலையாளிகள் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.