சரத் பவார் அவுரங்கசீப்பை ஒரு துறவி என்று நினைக்கிறாரா?... சத்ரபதி சிவாஜி மகாராஜை கொல்ல வரவில்லையா?.. ராஜ் தாக்கரே

 
இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் இல்லை! மனிதநேயத்தையும் குத்தகைக்கு எடுக்கவில்லை…. பொங்கிய ராஜ்தாக்கரே

சரத் பவார் அவுரங்கசீப்பை ஒரு துறவி என்று நினைக்கிறாரா?, சத்ரபதி சிவாஜி மகாராஜை கொல்ல வரவில்லையா? இது மறக்கப்படுகிறது என ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ராஜ் தாக்கரே உரையாற்றுகையில் கூறியதாவது: நான் எனது தொண்டர்களை ஒலிபெருக்கியில் ஹனுமன் கீர்த்தனைகளை பாட சொன்ன பிறகு, ரானா தம்பதியினர் தாங்கள் மாடோஸ்ரீயில் ஹனுமன் கீர்த்தனைகளை பாட போவதாக கூறினார்கள். மாடோஸ்ரீ ஒரு மசூதியா?. பின்னர் சிவ சேனா தொண்டர்களுக்கும், ரானா தம்பதிக்கும் இடையே என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மசூதிகளில் ஒலி பெருக்கிகள் ஒலி விதிகளை பின்பற்றவில்லை என்றால் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்குவார்கள். 

 ரவி ரானா மற்றும் நவ்னீத் ரானா

இரண்டு நாட்களுக்கு முன்பு, எனது அயோத்தி பயணத்தை ஒத்திவைப்பது குறித்து டிவிட் செய்தேன். ஒவ்வொருவரும் தங்கள் எதிர்வினைகளை தெரிவிக்க அனுமதிக்கும் வகையில் வேண்டுமென்றே அறிக்கையை வழங்கினேன். நான் அயோத்தி பயணத்தை அறிவித்த பிறகு பேசப்பட்ட விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். எனது அயோத்தி பயணத்துக்கு எதிரானவர்கள் என்னை சிக்க வைக்க முயன்றனர், ஆனால் இந்த சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அயோத்திக்கு செல்லும் எனது திட்டத்தை விரும்பாதவர்கள் எனது வருகையை சுற்றி பிரச்சினைகளை உருவாக்க தொடங்கினர். 

சரத் பவார்

பொது சிவில் சட்டத்தை விரைவில் அமல்படுத்தவும், மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சட்டத்தை கொண்டு வரவும், அவுரங்கபாத் பெயரை சம்பாஜிநகர் என மாற்றவும் பிரதமர் மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன்.  அவுரங்கசீப்பின் சமாதிக்கு அக்பருதீன் ஓவைசி சென்றது அதிர்ச்சியூட்டுகிறது. சரத் பவார் அவுரங்கசீப்பை ஒரு துறவி என்று நினைக்கிறாரா?. அவுரங்கசீப் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த வந்ததாக அவர் (சரத் பவார்) கூறுகிறார். அவுரங்கசீப், சத்ரபதி சிவாஜி மகாராஜை கொல்ல வரவில்லையா?. இது இப்போது மறக்கப்படுகிறது. வரும் ஜூன் 1ம் தேதியன்று எனக்கு இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அதிலிருந்து குணமாக பிறகு மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.