மோடி ஜி, இந்தியாவுக்கு தேவை வேலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழிப்புதான், இன தூய்மை அல்ல.. ராகுல் காந்தி
இந்தியாவுக்கு தேவை வேலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழிப்புதான், இன தூய்மை அல்ல என பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியர்களின் இன தூய்மை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டம்மிட்டுள்ளதாகவும், மத்திய கலாச்சார அமைச்சகம் மரபணு வரலாற்றை நிறுவவும், இந்தியாவில் உள்ள இனங்களின் தூய்மையை கண்டறியவும் டி.என்.ஏ. விவரக்குறிப்பு கருவிகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தியை குறிப்பிட்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு மற்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், கடந்த முறை ஒரு நாட்டில் கலாச்சார அமைச்சகம் இன தூய்மை பற்றி ஆய்வு செய்த போது, அது நன்றாக முடிவடையவில்லை. இந்தியாவுக்கு தேவை வேலை பாதுகாப்பு மற்றம் பொருளாதார செழிப்புதான், இன தூய்மை அல்ல, பிரதமர் என பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், மரபணு வரலாற்றை நிறுவவும், இந்தியாவின் இனங்களின் தூய்மையை கண்டறியவும் டி.என்.ஏ. விவரக்குறிப்பு கருவிகளை பெறுவதற்கான மத்திய கலாச்சார அமைச்சகத்தின் முடிவை விட மோசமான எதுவும் இருக்க முடியாது. மரபணு வரலாறு ஒன்றுதான், ஆனால் இனத் தூய்மையா? இது 1930களின் ஜெர்மனி என பதிவு செய்து இருந்தார்.