உங்கள் கொள்ளை முறைக்கு எதிராக ஜனநாயகத்தின் குரல் உள்ளது.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி..
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையை குறைக்காததை குறிப்பிட்டு, உங்கள் கொள்ளை முறைக்கு எதிராக ஜனநாயகத்தின் குரல் உள்ளது என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி தாக்கினார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஏன் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்காததை குறிப்பிட்டு பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கச்சா எண்ணெய் 25 சதவீதம் குறைந்துள்ளது, சமையல் கியாஸ் விலை 40 சதவீதம் குறைந்துள்ளது இது சர்வதேச விலை விபரம். இருந்தும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை ஏன் குறைக்கப்படவில்லை. பிரதம மந்திரி அவர்களே, உங்கள் கொள்ளை முறைக்கு எதிராக ஜனநாயகத்தின் குரல் உள்ளது- இந்திய ஒற்றுமை நடைப்பயணம், எனக்கு பதில் சொல்லுங்கள் என பதிவு செய்துள்ளார்.
இந்திய ஒற்றுமை நடைப்பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது மத்திய பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானுக்கு செல்கிறது.