உண்மையான தேசபக்தி ராணுவத்தை பலப்படுத்துவது, ஆனால் நீங்கள் அக்னிபாத் மூலம் ராணுவத்தை பலவீனப்படுத்துகிறீர்கள்.. ராகுல் காந்தி

 
மோடி

உண்மையான தேசபக்தி ராணுவத்தை பலப்படுத்துவதில் உள்ளது. ஆனால் நீங்கள் ஒரு புதிய (அக்னிபாத் திட்டம்) ஏமாற்று மூலம் ராணுவத்தை பலவீனப்படுத்துகிறீர்கள் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு அண்மையில் முப்படைகளில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில்  இருந்து விடுவிக்கப்படுவர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் எரிப்பு, ரயில் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

கே.சி.வேணுகோபால்

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. மேலும் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக வரும் 27ம் தேதி நாடு முழுவதும் சத்யாகிரகம் போராட்டத்தை நடத்த உள்ளதாக மாநிலங்களவை எம்.பி. வேணுகோபால் தெரிவித்தார். அன்றைய தினம் அந்தந்த மாநிலங்களில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சத்யாகிரகம் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், இந்திய மண்ணில் சீன ராணுவம் அமர்ந்திருக்கிறது. பிரதமரே உண்மையான தேசபக்தி ராணுவத்தை பலப்படுத்துவதில் உள்ளது. ஆனால் நீங்கள் ஒரு புதிய ஏமாற்று மூலம் ராணுவத்தை பலவீனப்படுத்துகிறீர்கள். நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றும் இந்த இயக்கத்தில், நாங்கள் இளைஞர்களுடன் இருக்கிறோம். நான் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என பதிவு செய்துள்ளார்.