கர்நாடகாவில் பா.ஜ.க. மக்களை பிரித்து வெறுப்பை பரப்புகிறது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 
ராகுல் காந்தி

கர்நாடகாவில் பா.ஜ.க. மக்களை பிரித்து வெறுப்பை பரப்புகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் தாவணகெரேயில்  முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பிறந்த நாள் கொண்டாட்டங்களை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: நான் பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதில்லை. 

சித்தராமையா

சித்தராமையாவுடன் எனக்கு ஒரு சிறப்பு பந்தம் இருப்பதால் இங்கு வந்துள்ளேன். ஒரு நபராக நான் விரும்புவது மட்டுமல்லாமல்,அவருடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன். ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்கள் மீதான அவரது கருணையை நான் பகிர்ந்து கொள்கிறேன். அவர் கர்நாடக அரசை எப்படி நடத்தினார் என்பதையும் நான் பாராட்டுகிறேன். கர்நாடக மக்களுக்கு வழிகாட்டினார். 

பா.ஜ.க.

அவருக்கு (சித்தராமையா) கர்நாடகா பற்றிய தொலைநோக்கு பார்வை இருந்தது. இது அனைவருக்கும் நியாயம் என்ற கருத்தை முன்வைத்தது. பா.ஜ.க. ஆட்சியில் இன்று நாம் பார்ப்பதற்கு முற்றிலும் அது மாறுபட்டது. கர்நாடகாவில் பா.ஜ.க. மக்களை பிரித்து வெறுப்பை பரப்புகிறது. மாறாக காங்கிரஸ் மக்களை ஒன்றிணைத்து மாநிலத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.