ராஜஸ்தானில் கவுதம் அதானி ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு... நான் எந்த தொழிலதிபருக்கும் எதிரானவன் அல்ல- ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

நான் எந்த தொழிலபதிபருக்கும் எதிரானவன் அல்ல என்று ராஜஸ்தானில் கவுதம் அதானி ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது குறித்து ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற இன்வென்ஸ் ராஜஸ்தான் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பேசுகையில்,  காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இதில், 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம், சிமெண்ட் உற்பத்தி ஆலை விரிவாக்கம் மற்றும் ஜெய்பூர் விமான நிலைய மேம்பாடு உள்ளிட் திட்டங்கள் அடங்கும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கவுதம் அதானி தெரிவித்தார்.

கவுதம் அதானி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி அதானி, அம்பானியை மறைமுகமாக தாக்கி வரும் வேளையில், கவுதம் அதானி காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்து இருப்பது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது. ராஜஸ்தானில் கவுதம் அதானி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது: எந்த முதல்வரும் அத்தகைய வாய்ப்பை மறுக்க முடியாது. எந்த முதல்வரும் மாநிலத்துக்கு இது போன்ற வர்த்தகத்தை மறுப்பது சரியல்ல.

பா.ஜ.க.

அதானி குழுமத்துக்கு ராஜஸ்தான் அரசு எந்த முன்னுரிமையும் வழங்கவில்லை. அவர்கள் (கெலாட் அரசு) அவருக்கு எந்த வகையிலும் உதவில்லை. இரண்டு மூன்று தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. ஏன் ஏகபோக உரிமை கொடுக்கிறது என்பதுதான் எனது கேள்வி. அவர்கள் பணத்தை குவிக்க உதவுகிறார்கள். நான் எந்த தொழிலதிபருக்கும் எதிரானவன் அல்ல, ஏகபோகத்திற்கு எதிரானவன். அதானிக்கு உதவ ராஜஸ்தான் அரசு எந்த அரசியல் அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை. அதை அவர்கள் செய்யும் நாளில் நானும் மாநில அரசுக்கு எதிராக நிற்பேன். என தெரிவித்தார்.