குஜராத்தில் பா.ஜ.க.வை வெளியேற்ற எனக்கு திறமையான 5 தலைவர்கள் போதும்.. ராகுல் காந்தி நம்பிக்கை

 
ராகுல் காந்தி

குஜராத்தில் அடுத்த தேர்தலில் ஆட்சியிலிருந்து பா.ஜ.க.வை வெளியேற்ற எனக்கு திறமையான 5 தலைவர்கள் போதும் என்று ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்களிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஒருநாள் பயணமாக குஜராத் சென்றார். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றுகையில் கூறியதாவது: அவர்கள் (பா.ஜ.க.) சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போலீஸ், குண்டர்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் புதிய ஆடைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த விஷயங்கள் எல்லாம் முக்கியமில்லை. முக்கியமானது உண்மை என்பதை குஜராத் நமக்கு கற்பிக்கிறது. காந்திஜியை பாருங்கள். அவர் எப்போதாவது நல்ல ஆடைகளை வைத்திருந்தாரா, அமலாக்கத்துறை அல்லது சி.பி.ஐ.? இல்லை. ஏனென்றால் உண்மை எப்போதும் எளிமையானது.

பா.ஜ.க.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அதை ஏற்கவில்லை. குஜராத் மக்கள் உங்களை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். இங்குள்ள காங்கிரஸூக்கு ஏற்பட்ட பாதிப்பை விட, குஜராத் மக்களுக்கு பா.ஜ.க. கேடு விளைவித்துள்ளது. அப்படியானால் ஏன் (நோக்கத்தை மக்களுக்கு எடுத்து செல்வதில்) குழப்பம்? ஏனென்றால் நமக்கு இரண்டு வகையான தலைவர்கள் உள்ளனர். 

பிரதமர் மோடி

ஒருவர் களத்தில் நின்று சண்டை போடுபவர். இன்னொருவர் ஏ.சி. அலுவலகங்களில் அமர்ந்து பேசுவதையும் பேச்சையும்  தவிர வேறு எதுவும் செய்வதில்லை. பிறருக்கு இடையூறு விளைவிக்கும் தலைவர்களின் பட்டியலை தயார் செய்யுங்கள். அவர்கள் கவுரவர்கள். பா.ஜ.க. அவர்களை தங்கள் மடியில் எடுக்கும். அடுத்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை வெளியேற்ற எனக்கு இங்கிருந்து திறமையான 5 தலைவர்கள் மட்டுமே தேவை. பா.ஜ.க.வின் அரசியலால் குஜராத் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் இங்கு ஒரு முக்கிய பிரச்சினை. சிறு வணிகங்கள் ஒரு காலத்தில் குஜராத்தின் மிகப்பெரிய பலமாகவும், முதுகெலும்பாகவும் கருதப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு மற்றும் தொற்றுநோய்களின்போது தனது செயல்களால் அதை அழித்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.