தெற்குடன் ஒப்பிடும்போது உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடைப்பயணத்துக்கு நல்ல வரவேற்பு.. ராகுல் காந்தி

 
டெல்லிக்கு சென்றது ராகுல் காந்தியின் பாத யாத்திரை..  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

தெற்குடன் ஒப்பிடும்போது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் எங்களுக்கு (நடைப்பயணத்துக்கு)  நல்ல வரவேற்பு கிடைத்தது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் குருசேஷத்திரம் அருகே நடைப்பயணத்துக்கு நடுவே ராகுல் காந்தி ஊடகவியலாளர்களிடம் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: பயம், வெறுப்பு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிரானது இந்திய ஒற்றுமை நடைப்பயணம். பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் இந்தி பெல்ட்டில் (இந்தி பேசும் மக்கள் உள்ள மாநிலங்கள்) நடைப்பயணத்துக்கு மக்களிடம் இருந்து ஆதரவு கிடைக்காது என்று சிலர் கூறினர். மாறாக இந்த மாநிலங்களில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, மேலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. கேரளாவில் எங்களுக்கு கிடைத்த ஆதரவை, பா.ஜ.க. ஆளும் மாநிலமான கர்நாடகாவில் பெற முடியாது என்று மக்கள் கூறினர். ஆனால் அங்கு இன்னும் சிறப்பான ஆதரவு கிடைத்தது. 

ராகுல் காந்தி

தென்னிந்தியாவில் நடைப்பயணத்துக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் மகாராஷ்டிராவை அடையும் போது, அதற்கு ஆதரவு கிடைக்காது என்று அவர்கள் கூறினார்கள். நாங்கள் மகாராஷ்டிராவை அடைந்தபோது, தெற்கைவிட சிறப்பான வரவேற்பு கிடைத்தது. நடைப்பயணம் இந்தி பெல்ட் வழியாக செல்லும்போது எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்காது என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய பிரதேசத்தில் ஆதரவு இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டது. நாங்கள் ஹரியானாவை அடைந்தபோது,  இது பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்று கூறப்பட்டது, ஆனால் இங்கேயும் ஆதரவு அமோகமாக இருந்தது. நாங்கள் முன்னேறி செல்லும்போது, ஆதரவு மேம்பட்டு வருகிறது. தெற்குடன் ஒப்பிடும்போது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

பா.ஜ.க.

விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு ஆதரவான அரசுகளை இங்கு அமைப்போம். பா.ஜ.க.வின் மனதில் ராகுல் காந்தி உள்ளார். பா.ஜ.க. என் மனதில் இல்லை. எனது இமேஜ் பற்றி நான் கவலைப்படவில்லை. உங்கள் வேலையை செய்யுங்கள். முடிவை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கீதையில் கூறப்பட்டுள்ளது. அர்ஜூனன் மீனின் கண்ணை குறிவைத்தபோது, குறிவைத்த பிறகு என்ன செய்வேன் என்று அவர் கூறவில்லை. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி, வெறுப்பு பரப்பப்படுகிறது. இதை காங்கிரஸ் எப்போதாவது செய்ததா? வரலாற்றில் இதை நாங்கள் கூறியதில்லை. எரிபொருள் விலை, ஏற்றுமதி கொள்கை, காப்பீட்டு விலை மற்றும் உரங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டில் அனைத்து தரப்பிலிருந்தும் விவசாயிகள் தாக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.