ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்த நல்ல பணியை பா.ஜ.க. அழித்து விட்டது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 
ராகுல் காந்தி

காஷ்மீர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியதாக வெளியான தகவலை குறிப்பிட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்த நல்ல பணியை பா.ஜ.க. அழித்து விட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசம் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீரி பண்டிட் பண்டிட் பூரன் கிருஷ்ணன் பட் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக கடந்த திங்கட்கிழமையன்று ஒன்பது புலம்பெயராத காஷ்மீரி பண்டிட் குடும்பங்கள் சோபியான் மாவட்டத்தில் இருந்து ஜம்முவிற்கு இடம் பெயர்ந்ததாக தகவல் வெளியானது. இதனை குறிப்பிட்டு மத்திய பா.ஜ.க. அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், இந்த ஆண்டு காஷ்மீரில் 30 இலக்கு கொலைகள் நடந்துள்ளன. பண்டிட்டுகளின் வெளியேற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம்) செய்த நல்ல பணியை பா.ஜ.க. அழித்து விட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன், பெரிய அளவில் பேசிய பிரதமர் (மோடி), ஆட்சியை அனுபவிக்கிறார். காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக உள்ளனர் என பதிவு செய்துள்ளார்.

பவன் கேரா

காங்கிரஸின் ஊடகத் துறை தலைவர் பவன் கேரா கூறுகையில், காஷ்மீரி பண்டிட்டுகள் அவலநிலை குறித்து மோடி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். கடந்த எட்டு ஆண்டுகளில், இந்த அரசு செய்தவை மற்றும் செய்யாதவை அனைத்தும் அந்த வெள்ளை அறிக்கையில் வெளிவர வேண்டும். 80 கொலைகளுக்கு நீங்கள் (மத்திய பா.ஜ.க. அரசாங்கம்) பதில் சொல்ல வேண்டும். இது எப்படி இயல்பானது, இதற்கு பதில் சொல்லுங்கள் என தெரிவித்தார்.