நாட்டின் ஒரு பக்கம் உலகின் பணக்காரர்களும், மறுபுறம் உலகின் மிக அதிகமான வேலையில்லாதவர்களும் உள்ளனர்... ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

இந்தியாவில் ஒரு பக்கம் உலகின் பணக்காரர்கள் உள்ளனர், மறுபுறம் உலகின் மிக அதிகமான வேலையில்லாதவர்கள் உள்ளனர் என்று ராகுல் காந்தி  குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவின் எரகேராவில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: இன்று இந்த நாட்டையும் இப்பகுதியையும் பார்த்தால், பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எல்லா இடங்களிலும் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி விட்டன. இந்த நாடு வெறுப்பு மற்றும் வன்முறையின் நாடு அல்ல, அவை நாட்டுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. இந்தியாவை ஒருங்கிணைக்க அதிகாரம் அளித்துள்ளீர்கள். வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நின்றீர்கள். 

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

நாட்டில் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி தாக்குபவர்களிடமிருந்து இந்திய கொடியை பாதுகாத்து, அதை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்து சென்றிருக்கிறீர்கள். மொத்தம் சுமார் 3,500 கி.மீ. தூரம் நடப்பது எளிதானது அல்ல. மக்களின் ஆதரவும், வலிமையும், அன்பும் என்கு அதனை (நடைப்பயணம்) சற்று எளிதாகி விட்டது. நாட்டை ஒருங்கிணைக்கவும் மற்றும் வெறுப்பை ஒழிக்கவும், இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான அரசிடம் கூறவும், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் ஆகிய மூன்று காரணங்களுக்காக நடைப்பயணம் நடத்தப்படுகிறது.

கவுதம் அதானி

உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இந்தியாவை சேர்ந்தவர் (கவுதம் அதானி). அவருக்கு விமான நிலையங்கள், துறைமுகங்கள், விவசாய வணிகம், சாலை பணிகள் என நாட்டின் உள்கட்டமைப்பை முழுமையாக கொடுத்த இந்திய பிரதமர் (மோடி), இப்போது தொலைத்தொடர்பு துறையையும் அவருக்கு கொடுக்கிறார். இந்தியாவில் ஒரு பக்கம் உலகின் பணக்காரர்கள் உள்ளனர், மறுபுறம் உலகின் மிக அதிகமான வேலையில்லாதவர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.