பணம் இருந்தால் கர்நாடகாவில் அரசு வேலை வாங்கலாம்... பா.ஜ.க. அரசை தாக்கிய ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

பணம் இருந்தால் கர்நாடகாவில் அரசு வேலை வாங்கலாம் என்று அம்மாநில பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கர்நாடகாவில் நடந்து வருகிறது. கர்நாடகாவின் பல்லாரியில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகையில் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் தற்போதைய ஆட்சியானது 40 சதவீத கமிஷன் அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் எந்தவொரு வேலையையும் பணம் செலுத்துவதன் மூலம் செய்யலாம். 

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

கர்நாடக பா.ஜ.க. அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகத்துக்கு எதிரானது. கர்நாடகாவில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகத்துக்கு எதிரான அட்டூழியங்கள் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்று இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்று பிரதமர் மோடி கூறினார். அந்த வேலைகள் எங்கே போனது?. மாறாக, கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர். 

பா.ஜ.க.

கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன?.  ஒருவர் போலீஸ் உதவி ஆய்வாளராக வேண்டுமானால் ரூ.80 லட்சம் கொடுத்தால் ஆகி விடலாம். பணம் இருந்தால் கர்நாடகாவில் அரசு வேலை வாங்கலாம். உங்களிடம் பணம் இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இம்மாதம் 20ம் தேதி கர்நாடகாவில்  இருந்து வெளியேறும்.