நாடு முன்னேற, பா.ஜ.க.வின் எதிர்மறை சிந்தனையும், வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

நாடு முன்னேற வேண்டுமானால், பா.ஜ.க.வின் எதிர்மறை சிந்தனையும், வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், மக்கள் பிரச்சினைகள்- வருமானம், பணவீக்கம், பா.ஜ.க.வின் பிரச்சினை - கலவரங்கள், சர்வாதிகாரம். நாடு முன்னேற வேண்டுமானால், பா.ஜ.க.வின் எதிர்மறை சிந்தனையும், வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும். ஒன்றாக இந்தியாவுடன் இணைவோம் என பதிவு செய்து இருந்தார்.

பா.ஜ.க.

கடந்த திங்கட்கிழமையன்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் உள்ள கரானா கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியதாவது: இது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான சண்டை. அனைவரையும் ஒன்றிணைத்து, அனைவரையும் மதித்து, அனைவரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து முன்னேற வேண்டும் என்று கூறும் காங்கிரஸின் சித்தாந்தம் ஒரு பக்கம். பிரிவினை உருவாக்கி பழங்குடியினரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அழிக்கும் பா.ஜ.க. மற்றொரு பக்கம். இன்று இந்தியாவில் நடக்கும் சண்டை இது. 

காங்கிரஸ்

நாம் மக்களை இணைக்கிறோம், பா.ஜ.க. மக்களை பிரிக்கிறது. நாம் நலிவடைந்தவர்களுக்கு உதவுகிறோம், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய தொழிலதிபர்களுக்கு உதவுகிறார்கள். ஆளும் பா.ஜ.க. இரண்டு இந்தியாவை உருவாக்க விரும்புகிறது. ஒன்று பணக்கார இரண்டு முதல் 3 தொழிலதிபர்களுக்கு மற்றொன்று ஏழைகள், பழங்குடியினர், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு. எங்களுக்கு இரண்டு இந்தியா வேண்டாம். ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை பெறும் ஒரு இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.