உங்கள் வெறுப்பு பஜாரில் அன்பின் கடையை திறக்க நாங்கள் வந்துள்ளோம்.. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை தாக்கிய ராகுல் காந்தி

 
காங்கிரஸ்

உங்கள் வெறுப்பு பஜாரில் அன்பின் கடையை திறக்க நாங்கள் வந்துள்ளோம் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. மக்களிடம் கூறியுள்ளேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நேற்று காலை 6.30 மணி அளவில் தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தது. அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில், பா.ஜ.க. மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் கடுமையாக விமர்சனம் செய்தார். ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: சிலர் வெறுப்பை பரப்புகிறார்கள். 

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

ஆனால் நாட்டின் சாமானியர்கள் இப்போது அன்பை பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கானோர் (இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில்) யாத்திரையில் இணைந்துள்ளனர். உங்கள் வெறுப்பு பஜாரில் அன்பின் கடையை திறக்க நாங்கள் வந்துள்ளோம் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. மக்களிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று 109வது நாளில் அடியெடுத்து வைக்கிறது.

இந்திய ஒற்றுமை நடைப்பயணம்

இந்திய ஒற்றுமை நடைப்பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும்.  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா, தெலங்கானா,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியில்  நடந்து கொண்டிருக்கிறது.