கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் கொடுங்க மோடி ஜி... ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

2020ம் ஆண்டின்  தொடக்கத்தில் தீவிரமாக பரவ தொடங்கிய தொற்றுநோயான  கொரோனா வைரஸ் உலகையே முடக்கியது. கொரோனாவால் ஒவ்வொரு நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். நம் நாட்டில் சுமார் 5.22 லட்சம் பேர் உயிர் இழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு மறைக்கிறது என்றும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மத்திய அரசின் புள்ளிவிவரத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டின.

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் பணியாளர்கள்

இந்த சூழ்நிலையில்,  உலகளாவிய கோவிட் இறப்புகளை பகிரங்கமாக்க  உலக சுகாதார அமைப்பு எடுத்தும் வரும் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு காட்டும் என தெரிவித்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மோடி அரசு குறைத்து காட்டுகிறது என்று குற்றம் சாட்டி வந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இந்த கட்டுரை பெரிய பலமாக அமைந்தது.

மோடி

ராகுல் காந்தி டிவிட்டரில்,  அந்த கட்டுரையின் தலைப்பை பதிவேற்றம் செய்து, மோடி ஜி உண்மையை பேசவும் இல்லை, மற்றவர்களை பேச விடவும் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று இன்னும் பொய் சொல்கிறார்கள். நான் முன்பே கூறியிருந்தேன், கோவிட் பாதிப்பில் அரசின் அலட்சியத்தால் இறந்தது 5 லட்சம் அல்ல, 40 லட்சம் இந்தியர்கள். கடமையை செய்யுங்கள், மோடி ஜி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குங்கள் என்று பதிவு செய்துள்ளார்.