எத்தனை பேரின் சிரிப்பை மோடி அரசு பறித்துள்ளது?.. ராகுல் காந்தி தாக்கு

 
ராகுல் காந்தி

பணவீக்கம் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு, எத்தனை பேரின் சிரிப்பை மோடி அரசு பறித்துள்ளது என ராகுல் காந்தி தாக்கினார்.

கடந்த ஜனவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.01  சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் சிறிது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு மோடி அரசை ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பணவீக்கம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், பணவீக்கம் தொடர்பான செய்தி நிறுவனத்தின் கட்டுரையை பதிவேற்றம் செய்து, இது தரவுகளிலிருந்து தெளிவாகிறது-பணவீக்கம் அதிகரித்து வருகிறது, வருமானம் குறைகிறது. ஆனால் மக்கள் படும் துன்பத்தையும வேதனையையும் எப்படி அளவிடுவது? எத்தனை குடும்பங்கள் உலர் ரொட்டி சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன? 

எத்தனை குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்? எத்தனை பெண்களின் நகை அடகு வைக்கப்பட்டது? எத்தனை பேரின் சிரிப்பை மோடி அரசு பறித்துள்ளது? என்று பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தி மற்றொரு டிவிட்டில், ஒரு முஸ்லிம் மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் கைகோர்த்து வரும் படத்தை ஷேர் செய்து, ஒன்றுபட்டு நிற்கிறோம். என் இந்தியா என பதிவு செய்து இருந்தார்.