புதிய இந்தியா சீனா சார்ந்ததா?.. சமத்துவ சிலையை குறிப்பிட்டு மத்திய அரசின் சுயசார்ப்பு திட்டத்தை தாக்கிய ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

சமத்துவ சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது, புதிய இந்தியா, சீனா சார்ந்ததா? என்று மத்திய அரசின் சுயசார்பு பாரதம் பார்வையை ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.


ஸ்ரீ ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள்  நிறைவுற்றதைக் கொண்டாடும் வகையில் அவருக்கு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் ஐம்பொன்னாலான சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையில்  உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை 1,500 டன் எடை மற்றும் 216 அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு திறந்து வைத்தார்.

சமத்துவ சிலை

பிரதமர் நரேந்திர மோடி நம் நாடு சுயசார்பு நாடாக இருக்க வேண்டும் அதாவது இறக்குமதியை சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில், தெலங்கானாவில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவ சிலை சீன நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி  மத்திய அரசின் சுயசார்பு கொள்கையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளாா.

சீனா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், சமத்துவ சிலை சீனாவில் உருவாக்கப்பட்டது. புதிய இந்தியா என்பது சீனா-சார்ந்ததா? என்று பதிவு செய்து இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடியாக மோடியின் சுயசார்பு இந்தியா கொள்கை குறித்து ராகுல் காந்தி  கேள்வி எழுப்பியுள்ளார்.