எடப்பாடியிடம் ராகுல் காட்டும் நெருக்கம்! பின்னணியில் சுனில்
எடப்பாடியிடம் ராகுல் காந்தி நெருக்கம் காட்டி வருவதற்கு காரணமே சுனில் தான் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் பிகே வைத்த நிபந்தனைகளால் காங்கிரஸ் தலைமை அதிர்ந்தது. இதனால் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தும் பிகே காங்கிரஸ் இடையே சுமூகமான போக்கு இல்லாததால் பிகே’க்கு பதிலாக அவரிடம் பணிபுரிந்து வந்து தனியாக நிறுவனத்தை தொடங்கி இருக்கும் சுனில் காங்கிரசுக்கு தேர்தல் வியூக ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு ஆலோசகராக இருந்துள்ளார் சுனில். தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திமுக -அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் ஆலோசகராக இருந்துள்ளார் சுனில்.
இந்த நிலையில் தற்போது பாஜகவின் ஆதரவு நிலையில் இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம் என்ற பேச்சு பரவலாக இருந்து வரும் நிலையில், அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பதால் இந்த மோதலில் பழனிச்சாமி வென்று அதிமுகவிற்கு பொதுச் செயலாளர் ஆகி விடுவார் என்று பரபரப்பு இருக்கிறது. அப்படி ஒன்று நடந்து விட்டால் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி என்ற தகவலும் கிடைத்திருக்கிறது காங்கிரஸ் தலைமைக்கு. சுனில் தான் இதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
பேரறிவாளன் விடுதலை விவாகரத்தில் திமுக மீது அதிருப்தியில் இருக்கும் ராகுல், திமுகவுடன் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கவே விரும்புகிறாராம். அது ஒரு வேலை முடிவானால் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்கிற ஐடியாவும் இருக்கிறதாம். அதற்காகத்தான் இப்போதில் இருந்தே எடப்பாடி உடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்று சொல்லி சுனில் அறிவுறுத்த, ராகுல் காந்தியும் இரண்டு மூன்று முறை எடப்பாடி உடன் பேசியிருக்கிறாராம். தமிழகத்தில் உள்ள இரண்டு காங்கிரஸ் எம்பிக்களும் எடப்பாடியுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி வருகிறார்களாம்.
தொடர்ந்து எடப்பாடி உடன் நெருக்கத்திலேயே இருக்க வேண்டும். திடீரென்று திமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வசதியாக இருக்கும் என்று சுனில் சொல்ல அப்படியே தான் ராகுலும் எடப்பாடி இடம் நெருக்கம் காட்டி வருகிறாராம்.