மோடியை அடுத்து ராகுலும் தமிழகத்தில் போட்டியிட திட்டம்

 
ra

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட திட்டமிட்டு இருக்கும் நிலையில் ராகுல் காந்தியும் தமிழகத்தில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள்  பரவுகின்றன.

 குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமர் வேட்பாளரானதும் 2014 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி, வதோதரா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டு வதோதரா தொகுதியை விடுவித்தார்.  இதன் பின்னர் 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நின்று அமோக வெற்றி பெற்றார்.  தற்போது மூன்றாவது முறையாக மோடி சந்திக்கும் மக்களவைத் தேர்தல் அவருக்கு பெரும் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது. 

o

 இந்த முறை இரண்டு தொகுதியில் போட்டியிடலாம் என்று பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளாராம்.   ஒன்று வழக்கம் போல் வாரணாசி.  இன்னொன்று தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதி என்கிறார்கள்.   காசி என்றாலே அடுத்தபடியாக எல்லோரும் சொல்வது ராமேஸ்வரம் தான்.  அப்படிப்பட்ட ஆன்மீக தலமான ராமேஸ்வரம் இருப்பதால் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட மோடி முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

 கர்நாடகத்தில் மட்டுமே பாஜக இருக்கும் நிலையில் அதற்கடுத்தபடியாக தமிழகத்தை பிடித்து விடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் போட்டியிட்டால் தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று பாஜக தலைமை நினைக்கிறதாம்.  2019 மக்களவைத் தேர்தலின் போதே  மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.   கடைசி வரைக்கும் அந்த முடிவு ஆலோசனை நடந்திருக்கிறது.  பின்னர் தான் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற நயினார் நாகேந்திரனுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் நிற்பதற்காக பாஜக குழு  தொகுதியில் ஆய்வு நடத்தியிருக்கிறது.  அதன் பின்னர் சாதக பாதகங்களை எல்லாம் அறிந்து  பிரதமர் மோடிக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறதாம்.   இதனால் வாரணாசி அடுத்து ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிடப் போவது உறுதி என்கிற தகவல் பரவுகிறது.

ra

இதே போல், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியும் தமிழகத்தில் போட்டியிட திட்டமிட்டு வருகிறாராம்.  கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் கேரளாவில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார் ராகுல்.  இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.  இதற்கான முன்னோட்டமாகத் தான் இந்தியா முழுவதும் சுற்றி பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கிறார் ராகுல் காந்தி என்று கூறப்படுகிறது.

 2024 ஆம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில்  ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட  போட்டியிட திட்டமிடப்பட்டு வருகிறது. அதேபோன்று கடந்த முறை கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டது போல் இந்த முறை தமிழ்நாட்டில் போட்டியிட திட்டமிட்டு வருவதாகவும் தகவல். 

 நானும் தமிழன் தான் என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் ராகுல் காந்தி.   அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உடன் உரையாடிய போது,  தமிழ் மக்கள் என் மீது செலுத்தும் அன்பு வேறு எந்த மாநிலத்திலும் எனக்கு கிடைத்தது இல்லை என்று கூறி இருக்கிறார். பாதயாத்திரையும் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி இருக்கிறார்.  இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளாக தான் இது தெரிகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.  

 இந்தியாவின் இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜக -காங்கிரஸ் இரண்டு கட்சியின் சார்பிலும் பிரதமர் வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக திட்டமிட்டு வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.