உள்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பகிரங்கமாக பேச வேண்டாம்.. காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்த ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

உள்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பகிரங்கமாக பேச வேண்டாம் என காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி எச்சரித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று 2 நாள் பயணமாக தெலங்கானா சென்று இருந்தார்.  அங்கு பல்வேறு கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது உள்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் சொல்லக்கூடாது என அம்மாநில காங்கிரசாரை ராகுல் காந்தி எச்சரித்தார்.

காங்கிரஸ்

அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில்,  உங்களுக்கு புகார் இருந்தால், நம் உள் அமைப்பில் அதை பற்றி வெளிப்படையாக பேசுங்கள். ஆனால் யாராவது ஊடகங்களுக்கு ஏதாவது சொன்னால், அவர்கள் (ஊடகங்கள்) கட்சிக்கு சேதம் விளைவிப்பார்கள், நாங்கள் அதை ஏற்க மாட்டோம் என தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன், ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் கட்சி உள்பரிசோதனைக்கு செல்கிறது, இது தீர்வுகளை அளிக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.

ப சிதம்பரம்

உத்தர பிரதேசம், கோவா உள்பட சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க மற்றும் கட்சிக்குள் இருக்கும் அனைத்து அமைப்புக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என அதிருப்தி தலைவர்கள் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.