கேஸ் விலை உயர்வு.. ஏழை, நடுத்தர இந்திய குடும்பங்களின் நலனுக்காக காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்கிறது.. ராகுல்

 
ராகுல் காந்தி

சமையல் கேஸ் விலை உயர்வை குறிப்பிட்டு, ஏழை மற்றும் நடுத்தர இந்திய குடும்பங்களின் நலனுக்காக காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்கிறது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை ராகுல் காந்தி தாக்கினார்.

மத்திய அரசு நேற்று முன்தினம் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தியுள்ளது. அதன்படி, டெல்லியில் 14.5 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சமையில் கேஸ் சிலிண்டர் விலை நேற்று முதல் ரூ.999.50ஆக அதிகரித்துள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் விலை உயர்வை குறிப்பிட்டு பிரதமர் மோடி தலைமையிலனா மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

சமையல் கேஸ் சிலிண்டர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், 2014ல் ரூ.410ஆக இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை இன்று ரூ.999ஆக உயர்ந்துள்ளது. 2014ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.827 மானியம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய மோடி ஆட்சி காலத்தில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் இல்லை.

காங்கிரஸ்

அப்போதைய இரண்டு சிலிண்டர்களின் விலையில் இப்போது ஒரு சிலிண்டர். ஏழை மற்றும் நடுத்தர இந்திய குடும்பங்களின் நலனுக்காக காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்கிறது. இது நமது பொருளாதார கொள்கையின் அடிப்படை என பதிவு செய்துள்ளார்.