அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே சமரசம்?.. விரைவில் நல்ல செய்தி வரும் - ராகுல் காந்தி சூசகம்

 
ராகுல் காந்தி

விரைவில் நல்ல செய்தி வரும் என்ற ராகுல் காந்தியின் அறிக்கையை அடுத்து அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் பேச்சு எழுந்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானின் ஆழ்வாரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு நடுவே அங்குள்ள ஒரு சர்க்யூட் ஹவுஸில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட் ஆகியோரை சந்தித்து  பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் ராகுல் காந்தியுடன் இருந்தார்.

அசோக் கெலாட்

இந்த சந்திப்பு முடிந்த பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், விரைவில் நல்ல  செய்தி வரும் என்று சூசகமாக தெரிவித்தார். அதன் பிறகு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடர்ந்தார். ராகுலின் இந்த அறிக்கையை அடுத்து அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக ஒரு புறம் பேசப்படுகிறது. அதேசமயம். மறுபுறம், சச்சின் பைலட் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என்பதைதான் ராகுல் காந்தி விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறியுள்ளார் என்று பேச்சு எழுந்துள்ளது. ஆக, விரைவில் நல்ல செய்தி வரும் என்ற ராகுல் காந்தியின் அறிக்கை, ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

ராஜஸ்தானில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. காங்கிரஸின்  இளம் தலைவரான சச்சின் பைலட் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கட்சி தலைமை,  அசோக்  கெலாட்டுக்கு முதல்வர் பதவியை கொடுத்தது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பொறுப்பை கொடுத்தது. இது சச்சின் பைலட்டுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2020ல் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்  மற்றும் துணை முதல்வர் பதவியை சச்சின் பைலட் இழந்தார். சச்சின் பைலட் கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் அசோக் கெலாட்டுக்கும், அவருக்கும் இடையே மறைமுகமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.