பிரதமரின் தினசரி செய்ய வேண்டிய பணிகள்... பெட்ரோல், டீசல் விலையை எவ்வளவு உயர்த்துவது.. ராகுல் கிண்டல்

 
பிரதமர் மோடி

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை எவ்வளவு உயர்த்துவது உள்ளிட்டவை பிரதமரின் தினசரி செய்ய வேண்டிய பணிகள் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 22ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டது. நேற்று வரையிலான 9 தினங்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா ரூ.5.60 உயர்த்தப்பட்டுள்ளது. 

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடியை கிண்டலாக தாக்கியுள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி டிவிட்டரில், பிரதமரின் தினசரி செய்ய வேண்டிய பணிகள் பட்டியல்- பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை எவ்வளவு உயர்த்துவது, மக்களின் செலவுகள் பற்றிய விவாதத்தை எப்படி நிறுத்துவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய வெற்றுக் கனவுகளை காண்பிப்பது எப்படி, எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்வது, விவசாயிகளை எப்படி அதிகமாக உதவியற்றவர்களாக ஆக்குவது என்று பதிவு செய்துள்ளார்.