இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே துரதிர்ஷ்டவசமான வெற்றி.. ராகுல்

 
ராகுல் காந்தி

கள்ள நோட்டுகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கியின் அறிக்கையை குறிப்பிட்டு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே துரதிர்ஷ்டவசமான வெற்றி என மத்திய அரசை ராகுல் காந்தி தாக்கினார்.

2016 நவம்பர் 8ம் தேதியன்று அனைத்து பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது (பணமதிப்பிழப்பு) என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் புதிய 500 மற்றும் 2,000 நோட்டுகளை வெளியிடுவதாகவும் அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழலை குறையும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும்  மற்றும் கள்ளநோட்டை அல்லது போலி ரூபாய் நோட்டை ஒழிக்கும் என மத்திய அரசு கூறியது.

மோடி

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், 2021-22ம் நிதியாண்டில் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 500 ரூபாய் போலி அல்லது கள்ள ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை 101.9 சதவீதமும், 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் 54.16 சதவீதமும் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு மத்திய அரசு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

பணமதிப்பிழப்பு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், நம் நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு ரொக்க பண புழக்கம் அதிகரித்து வருவத்தை வெளிப்படுத்தும் கிராப் ஒன்றை பதிவேற்றம் செய்து, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே துரதிர்ஷ்டவசமான வெற்றி என பதிவு செய்துள்ளார்.