காஷ்மீர் பண்டிட்டுகள் ஆர்ப்பாட்டம்.. மோடி அரசின் 8 ஆண்டுகளை கொண்டாடுவதில் பா.ஜ.க. மும்முரம்.. ராகுல் காந்தி

 
காஷ்மீர் பண்டிட்டுகள் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் பண்டிட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் ஆனால் மோடி அரசின் 8 ஆண்டுகளை கொண்டாடுவதில் பா.ஜ.க. மும்முரமாக இருக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ஜம்முவில் சம்பா மாவட்டம் குல்காமில் உள்ள கோபால்போராவில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்த 36 வயதான  ரஜினி பாலா என்பவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். கடந்த மே மாதத்தில் 2வது முறையாக முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த மே மாதத்தில் காஷ்மீரில் நடந்த ஏழாவது இலக்கு கொலையாகும்.

ராகுல் காந்தி

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் தொகுப்பின் கீழ் பணிபுரிந்த காஷ்மீர் பண்டிட்டுகள் நேற்று ஒரு போராட்டத்தை நடத்தினர். அடுத்த 24 மணி நேரத்துக்குள் தங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றாவிட்டால், பள்ளத்தாக்கில் இருந்து பெருமளவில் இடம்பெயறுவோம் என எச்சரிக்கை செய்தனர். இந்நிலையில், காஷ்மீரில் அரசு பணியாளர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு மத்திய அரசை காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

பா.ஜ.க.

ராகுல் காந்தி டிவிட்டரில், காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். நேற்றும் ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார். காஷ்மீர் பண்டிட்டுகள் 18 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பா.ஜ.க. 8 ஆண்டுகளை (பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டுகள் நிறைவு) கொண்டாடுவதில் மும்முரமாக உள்ளது. பிரதமரே இது திரைப்படம் அல்ல, காஷ்மீரின் இன்றைய யதார்த்தம் என பதிவு செய்துள்ளார்.