கோபப்படாதீங்க.. தொடர்ந்து கட்சியில் இருங்க.. ஹர்திக் படேலுக்கு தகவல் அனுப்பிய ராகுல் காந்தி.
தொடர்ந்து கட்சியில் இருங்க என குஜராத் செயல் தலைவர் ஹர்திக் படேலுக்கு ராகுல் காந்தி செய்தி அனுப்பியுள்ளார்.
குஜராத்தில் படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு பல போராட்டங்களை நடத்தியவர் ஹர்திக் படேல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைந்தார். தற்போது குஜராத் காங்கிரஸின் செயல் தலைவராக உள்ளார். ஹர்திக் படேல் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரது கட்சியை (காங்கிரஸ்) கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹர்த்திக் படேல் தனது டிவிட்டர் பயோவிலிருந்து காங்கிரஸ் மற்றும் அவரது சுயவிவர படத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை நீக்கினார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு சுமார் 6 மாதங்கள் உள்ள நிலையில், ஹர்திக் படேல் அதிருப்தியில் இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேசமயம் கட்சியில் தொடருமாறு ஹர்திக் படேலுக்கு ராகுல் காந்தி செய்தி அனுப்பியுள்ளார். மேலும், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பிற தலைவர்களை கருத்து வேறுபாடுகளை தீர்த்தக் கொள்ள ஹர்திக் படேலை சந்தித்து பேசும்படி ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும், காங்கிரஸ் தலைவர்கள் ஹர்திக் படேலுடன் பேசியதை உறுதி செய்தார். குஜராத்தில் கேத்ப்ரஹ்மா சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸின் அஷ்வின் கோட்வால். நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத வண்ணம் அஸ்வின் கோட்வால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததோடு, அன்றைய தினமே பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.