காங்கிரஸில் தீவிரமடையும் நெருக்கடி.. பல்கலைக்கழகத்தில் உரையாற்ற லண்டனுக்கு பறந்த ராகுல் காந்தி..
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக ராகுல் காந்தி அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆளும் கட்சியான பா.ஜ.க., குஜராத்தில் தடம் பதிக்க துடிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை இப்போதே தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் குஜராத் காங்கிரஸில் உட்கட்சி பூசல் கொழுந்து விட்டு எரிகிறது. குஜராத் காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த கட்சியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், அண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு குட் பை சொன்ன அந்த கட்சியின் மூத்த தலைவர் சுனில் ஜாகர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைகள் வெளியேறுவது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்லைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டன் சென்றுள்ளார்.
ராகுல் காந்தியின் இங்கிலாந்து பயணம் குறித்து காங்கிரஸின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவால கூறுகையில், வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் இந்தியாவுக்கான யோசனைகள் கருத்தரங்கில் ராகுல் காந்தி பேசுகிறார். நாட்டிற்கான நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ன என்பது குறித்து புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் அவர் உரையாடுவார். மே 23ம் தேதியன்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 75வது ஆண்டில் இந்தியா: ஒரு நெகிழ்ச்சியான - நவீன இந்தியாவுக்கான சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.