குடியரசு தலைவர் தேர்தல்.. இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம்.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

குடியரசு தலைவர் தேர்தல் இரண்டு தனி நபர்களுக்கு இடையே நடக்கும் சண்டை அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.


குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். 

எதிர்க்கட்சி  தலைவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்த யஷ்வந்த் சின்ஹா

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா நேற்று குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சரத் பவார், அகிலேஷ் யாதவ் மற்றும் பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், இது இரண்டு தனி நபர்களுக்கு இடையே நடக்கும் சண்டை அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், 17க்கும் மேற்பட்ட கட்சிகள் எங்களை (குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை) ஆதரிக்கின்றன. இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றவும், நமது அரசியலமைப்பை பாதுகாக்கவும், பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நாங்கள் அனைவரும் யஷ்வந்த் சின்ஹாவுக்காக வேரூன்றி இருக்கிறோம என தெரிவித்தார்.