வெளியானது பி.எம்.கேர்ஸ் நிதி குறித்த தணிக்கை அறிக்கை.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி

 
பி.எம்.கேர்ஸ்

பி.எம்.கேர்ஸ் நிதி குறித்த தணிக்கை அறிக்கை வெளியானதை குறிப்பிட்டு, பிரதமரின் பொய்கள் என்ற இரண்டே சொற்களில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

நம் நாட்டில் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்தது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு லாக்டவுனை அமல்படுத்தியது.  மேலும், கோவிட்-19ஐ எதிர்த்து போராட நிதி நன்கொடைகளை பெறும் நோக்கத்துடன் மோடி அரசு பி.எம். கேர்ஸ் நிதியத்தை அமைத்தது. பி.எம்.கேர்ஸ் நிதியத்துக்கு பல்வேறு தரப்பினரும் தாராளமாக நிதி வழங்கினர்.

காங்கிரஸ்

அதேசமயம் பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன. இந்த சூழ்நிலையில், தற்போது பி.எம்.கேர்ஸ் நிதி குறித்த தணிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. 2021 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் மொத்தம் ரூ.10,990 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இதில், தன்னார்வ பங்களிப்பு மூலம் ரூ.7,183 கோடிக்கும் அதிகமாகவும், வெளிநாட்டு பங்களிப்பாக ரூ.494 கோடிக்கும் அதிகமாக பெறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி

அதேசமயம், 2020-21ம் நிதியாண்டில் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.3,976 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மேட் இன் இந்தியா வென்டிலேட்டர்களுக்காக ரூ.1,311 கோடியும், புலம் பெயர்ந்தோர் நலனுக்காக மாநிலங்களுக்கு ரூ.1,000 கோடியும் ஒதுக்கப்பட்டது. மேலும், 6.6 கோடி கோவிட் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக ரூ.1,392 கோடி பயன்படுத்தப்பட்டது. ரூ.7,014 கோடி செலவிடப்படாமல் உள்ளது. ராகுல் காந்தி இதனை விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், பிரதமரின் பொய்கள் என்று பதிவு செய்ததோடு, பி.எம்.கேர்ஸ் நிதி தணிக்கை செய்யப்பட்டது தொடர்பான செய்தியை பதிவேற்றம் செய்து இருந்தார்.