ராகுலிடம் அதை பேசக்கூடாது.. அவர் உன்னை பார்த்தால் அவ்வளவுதான்..மிரட்டினாரா அந்த தலைவர்?

 
ru

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்கிற இந்தியாவை இணைக்கும் தேசிய ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கி உள்ளார்.   நேற்றுடன் அவர் நான்காவது நாள் பாத யாத்திரையை நிறைவு செய்திருக்கிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைக்கும்  2 யூனியன் பிரதேசங்கள் , 12 மாநிலங்களில் இந்த யாத்திரை செல்கிறது.

rrr

ராகுலின் பாதயாத்திரையில் பங்கேற்ற சுப.உதயகுமாரன், ராகுலும் அணுசக்தியும் என்கிற தலைப்பில் தனது முகநூலில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.  ‘’கடந்த செப். 6, 2022 அன்று இரவு 10 மணியளவில் கன்னியாகுமரி விடுதி ஒன்றில் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. காங்கிரசு கட்சி சார்பாக சில மூத்த தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், குடிமைச் சமூக அமைப்புக்கள் சார்பாக யோகேந்திர யாதவ்  தலைமையில் நாங்கள் சிலரும் கலந்துகொண்டோம்’’என்று தொடங்குகிறது அந்த கட்டுரை. 

அதில்,  ‘’கூடங்குளம், ஸ்டெர்லைட், கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுகம், உடன்குடி அனல்மின் நிலையம், தனியார் தாதுமணற் கொள்ளை, அரசு அரியவகை மணல் ஆலை, குமரி மாவட்ட கனிமவளக் கொள்ளை போன்ற விடயங்கள் குறித்து ராகுல் காந்தியிடம் பேசுவதற்கு உரிய நபர்களின் பெயர்கள் பட்டியலையும், அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புக்களின் பட்டியலையும் நான் தயாரித்து அளித்திருந்தேன். அவற்றைப் பற்றி விவாதித்தோம்.

u

கூட்டம் முடிவடையும் தருவாயில் ஒரு மூத்த தலைவர் “கூடங்குளம் பற்றி ராகுலிடம் பேசக்கூடாது” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். நான் உடனே “ஏன் அதைப் பற்றி மட்டும் பேசக் கூடாது?” என்று கேட்டேன். அவர் “அது எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் “ என்று பதில் சொன்னார். ஒருசில நிமிடங்களுக்கு ஒருவித நிசப்தம் நிலவியது. அவரது நிலைப்பாடு பற்றி பேசுவதற்காக, நான் எனது இருக்கையிலிருந்து எழுந்து அந்த தலைவர் அருகே சென்றேன். அவர் என்னுடைய கைகளைப் பற்றிக்கொண்டு, “ஸ்டெர்லைட் பற்றிப் பேசுவோம், வேறு எதைப் பற்றி வேண்டுமென்றாலும் பேசுவோம், ஆனால் கூடங்குளம் மட்டும் வேண்டாம்” என்றார். நான் உடன்பட மறுத்தேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் அந்த கட்டுரையில்,  ‘’உடனடியாக அவர் தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு, “அவர் மட்டும் உன்னைப் பார்த்தால், எல்லாமே முடிந்துவிடும்”என்றார். என்னை மிரட்டினாரா, அல்லது தவறான வார்த்தைகளைக் கோர்த்து ஏதோ அர்த்தமின்றிப் பேசுகிறாரா என்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும் அவரை அப்படியே விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், “அந்த தலைவர்தான் என் வீட்டில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ரெய்டு நடத்தச் செய்தார். எனக்கு வெளிநாட்டுப் பணம் வருகிறது என்று பொய் சொன்னார், அந்நிய நாட்டு கைக்கூலி என்று அவதூறு பரப்பினார். இனிமேலும் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினேன்.

ya

இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்கும்போது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எங்களிடம் வந்து “அவ்வளவு பெரிய கூட்டத்தை எவ்வளவு கட்டுக்கோப்பாக, அமைதியாக வழிநடத்தினார். அதற்காக நாம் இவரை பாராட்ட வேண்டும்” என்று சொல்லி ஒருவித சமாதானம் ஏற்படுத்த முயன்றார்.    நான் கோபத்துடனும், எரிச்சலுடனும் வெளியே போய் நின்று கொண்டிருந்தபோது, இன்னொரு மூத்த தலைவர் என்னிடம் வந்து என்னை சமாதானப்படுத்த முயன்றார். “கூடங்குளம் பற்றி பேசக் கூடாது என்றால், நான் இந்த நிகழ்விலிருந்து வெளியேறிவிடுவேன்” என்றேன். என்னுடைய குடிமைச் சமூக அமைப்புத் தோழர்களிடமும் இப்படியேச் சொல்லிவிட்டு வெளியேறினேன்’’என்கிறார்.

அந்த பதிவில் தொடர்ந்து உதயகுமாரன்,   ‘’அடுத்த நாள் அதிகாலை ஒரு மூத்த காங்கிரசுத் தலைவர் என்னை கைப்பேசியில் அழைத்து மன்னிப்புக் கேட்டார். சற்று நேரத்தில் யோகேந்திர யாதவ்  என்னை கைப்பேசியில் அழைத்து ராகுல் காந்தியிடமேப் பேசிவிட்டேன். “’எந்த விடயமானாலும் பேசலாம், பேச வேண்டும்’ என்று அவர் சொல்லிவிட்டார்” என்று தெரிவித்தார். அதன் பிறகுதான் நான் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றேன்.

su

செப். 7, 2022 அன்று மாலை கன்னியாகுமரியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்ட மேடையில் நாங்கள் சென்று அமர்ந்திருந்தோம். இடிந்தகரைப் போராட்டத்தின்போது என்னோடு கடுமையாக மோதிக் கொண்டிருந்த ஒரு ச.ம.உ. உள்ளிட்ட பல தலைவர்கள் சிரித்தும் வணங்கியும், கையசைத்தும் வரவேற்றனர். முன்னர் குறிப்பிடப்பட்ட தலைவரும் மேடையில்தான் அமர்ந்திருந்தார், ஆனால் நாங்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை.

செப். 8, 2022 அன்று மதிய உணவு இடைவேளையின்போது, ராகுல் எங்களை நாங்களெல்லாம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சுசீந்திரம் பள்ளிக்கூட வராண்டாவுக்கே வந்து சந்தித்தார். எங்களோடு தரையில் அமர்ந்து பேசினார். நானும், தோழர். கோ. சுந்தர்ராஜனும், தோழர் கதிரவன் ராயனும் கூடங்குளம் திட்டம், பிற அணுஉலைத் திட்டங்கள், இந்திய அணுசக்திக் கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துரைத்தோம். ராகுல் பல கேள்விகள் கேட்டு எங்களிடமிருந்து விளக்கமும் பெற்றார். கூடங்குளம் பற்றி பேசவேக் கூடாது என்று வீராப்புப் பேசிய மூத்தத் தலைவரும் எங்களோடு அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

ud

ராகுலின் சனநாயகத்தன்மை, திறந்தவெளித்தன்மை, எளிமை, மக்கள் மீதான மரியாதை போன்றவை எனக்குப் பிடித்திருக்கின்றன. அவர் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருவாரா, வந்தால் இப்படியேத் தொடர்வாரா, நமக்கு உதவுவாரா என்கிற கேள்விகளுக்கு என்னிடம் விடை கிடையாதுதான். இங்கே இப்போது என்ன நடக்கிறது என்பதுதானே அரசியல்? அதனடிப்படையில் சொல்கிறேன் பாசிச சக்திகளை எதிர்கொள்ள இப்போதிருக்கும் ஒரே தலைவர் ராகுல்தான். எனவே நான் அவரோடு நிற்கிறேன். அவருக்கு வேண்டிய என்னாலியன்ற அனைத்து உதவிகளும் செய்வேன்’’ என்கிறார் உறுதியாக.

ru

’’நான் காங்கிரசு கட்சியில் சேரவில்லை. யாரிடமும் எந்த பேரமும் பேசவில்லை. எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் இல்லவே இல்லை. காங்கிரசு கட்சியிடமிருந்து எந்த விதமான உதவிகளும் பெறவில்லை. இதுவரை இந்திய ஒற்றுமை பயணம் தொடர்பாக கிட்டத்தட்ட இருபதாயிரம் ரூபாய் என்னுடைய சொந்தப் பணத்தில் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய தோழர்கள் சிலரும் தங்கள் சொந்தப் பணத்தையேச் செலவு செய்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து நாட்கள் இடையறாது உழைத்திருக்கிறோம். இன்னும் உழைப்போம்!’’ என்கிறார் அழுத்தமாக.