பா.ஜ.க. தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சியை நேருக்கு நேர் எதிர்க்க வேண்டும்.. ராகவ் சதா

 
ராகவ் சதா

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரை பா.ஜ.க. ஆதரிக்கபோவதாக கூறப்படுவதை குறிப்பிட்டு, பா.ஜ.க. தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சியை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராட வேண்டும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா தெரிவித்தார்.

டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இம்மாதம் 7ம் தேதியன்று டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 250 வார்டுகளில்  ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை தன் வசம் வைத்திருந்த பா.ஜ.க. 104 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணைமேயர் தேர்தல் ஜனவரி 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  டெல்லி  மாநகராட்சி மேயர் பதவிக்கு ஷெல்லி ஒபராயும், துணை மேயர் பதவிக்கு ஆலி முகமது இக்பாலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி

இந்நிலையில், மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரை பா.ஜ.க. ஆதரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆம் ஆத்மி கட்சி விமர்சனம் செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், எந்த வேட்பாளரையும் நிறுத்தப் போவதில்லை என்றும் டெல்லி பா.ஜ.க. தெரிவித்தது. 

பா.ஜ.க.

ஆனால் தற்போது பா.ஜ.க. சுயேட்சை வேட்பாளரை தேர்தலில் நிறுத்த உள்ளது. பா.ஜ.க. கவுன்சிலர்கள் அந்த சுயேட்சை வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் ஆம் ஆத்மி சவால் விடப் போகிறார்கள். தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. பா.ஜ.க. தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சியை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராட வேண்டும். சுயேட்சை வேட்பாளரின் தோளில் துப்பாக்கியை வைப்பது இவ்வளவு பெரிய கட்சிக்கு பொருந்தாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.