ஆம் ஆத்மி கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் கூட ஆகவில்லை, நாங்கள் 2 மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறோம்... ராகவ் சதா
ஆம் ஆத்மி கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் கூட ஆகவில்லை, நாங்கள் இரண்டு மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறோம் என அந்த கட்சியின் ராகவ் சதா தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பொறுப்பாளர் ராகவ் சதா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி தேசிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதை பஞ்சாப் தேர்தல் காட்டுகிறது. ஒரு மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க 10 ஆண்டுகள் ஆனது. ஆம் ஆத்மி கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் கூட ஆகவில்லை, நாங்கள் இரண்டு மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறோம்.
ஆம் ஆத்மி காங்கிரஸின் தேசிய மற்றும் இயற்கையான மாற்றாக இருக்கும். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. கடவுள் சித்தமாக இருந்தால், மக்கள் ஒரு வாய்ப்பை வழங்கினால் அவர் நிச்சயமாக ஒரு பெரிய பாத்திரத்தில்.. பிரதமர் பாத்திரத்தில் விரைவில் காணப்படுவார். ஆம் ஆத்மி ஒரு பெரிய தேசிய அரசியல் சக்தியாக உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. கணிப்புகள் உண்மையானால் ஆம் ஆத்மி கட்சி தேசிய அரசியலில் புதிய சக்தியாக உருவெடுக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.