நிதிஷ் குமார் தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததால் பா.ஜ.க.வினர் அச்சத்தில் உள்ளனர்.. ரப்ரி தேவி

 
ரப்ரி தேவி

நிதிஷ் குமார் தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததால் அவர்கள் (பா.ஜ.க.) அச்சத்தில் உள்ளனர் என்று லாலு பிரசாத் மனைவி ரப்ரி தேவி தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி அரசு நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது. முன்னதாக, வேலைக்கான நிலம் ஊழல் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினர் சுனில் சிங் மற்றும் அந்த கட்சி எம்.பி.க்கள் அஷ்பக் கரீம், பயாஸ் அகமது சுபோத் ராய் ஆகியோருக்கு தொடர்புடைய சொத்துக்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அதேசமயம் சி.பி.ஐ. சோதனைக்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம் என்று ரப்ரி தேவி தெரிவித்தார்.

ராஷ்டிரிய ஜனதா தளம்

பீகாரின் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ரப்ரி தேவி கூறுகையில், பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததால் அவர்கள் (பா.ஜ.க.) அச்சத்தில் உள்ளனர். பா.ஜ.க. தவிர அனைத்து கட்சிகளும் எங்களுடன் உள்ளனர். மாநிலத்தில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது, நாங்கள் பயப்பட மாட்டோம், ஏனெனில் இது நடப்பது இது முதல் முறையல்ல என்று தெரிவித்தார்.

மனோஜ் ஷா

ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஷா கூறுகையில், அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை அல்லது சி.பி.ஐ. ரெய்டு என்று சொல்வதில் பயனில்லை, இது பா.ஜ.க.வின் ரெய்டு. அவர்கள் (விசாரணை அமைப்புகள்) பா.ஜ.க.வின் கீழ் வேலை செய்கிறார்கள், அவர்களின் அலுவலகங்கள் பா.ஜ.க. எழுத்துடன் இயங்குகின்றன. இன்று (நேற்று) பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் இங்கு என்ன நடக்கிறது? இது யூகிக்கக்கூடியதாகி விட்டது என தெரிவித்தார்.