பீகாரில் மாமா-மருமகன் அரசாங்கம் மீண்டும் வந்து விட்டது... தேஜஸ்வி யாதவ்
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி அரசாங்கம் அமைய உள்ளதை குறிப்பிட்டு, மாமா-மருமகன் அரசாங்கம் மீண்டும் வந்து விட்டது என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி நடைபெற்று வந்தது. இருப்பினும் சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, அக்னிபாத் உள்பட பல்வேறு விஷயங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இது போன்ற காரணங்களால் இரு கட்சிகள் இடையே உறவு சரியாக இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார், பின் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனையடுத்து, ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசியதை தொடர்ந்து மெகா கூட்டணியில் இணைந்தார். பின்னர், தேஜஸ்வி யாதவ் மற்றும் மெகா கூட்டணி தலைவர்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்தித்து அவரிடம் 164 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து புதிய அரசு அமைக்க அழைப்பு விடும்படி நிதிஷ் குமார் கோரினார். கவர்னரை சந்தித்த பிறகு நிதிஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: பீகாரில் மாமா-மருமகன் அரசாங்கம் மீண்டும் வந்து விட்டது. நாங்கள் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். நிதிஷ் குமார் நாட்டிலேயே மிகவும் அனுபவம் வாய்ந்த முதல்வர்.
பா.ஜ.க.வுக்கு மக்களை மதவாத அடிப்படையில் பிரிப்பது மட்டுமே தெரியும். கூட்டாளிகளுக்கு பா.ஜ.க. என்ன செய்கிறது என்று பாருங்கள். அது அவர்களை முடிக்க முயற்சிக்கிறது. பஞ்சாப் அல்லது மகாராஷ்டிராவை பாருங்கள். பீகாரிலும் அதை செய்ய முயன்றனர். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது சமீபத்திய பாட்னா பயணத்தின்போது, பிராந்திய கட்சிகளை முடிக்க வேண்டும் என்று பேசினார். ஜனநாயகத்தின் தாயகமான பீகாரில் அவர் எப்படி இப்படி சொல்ல முடியும்? அவர் அனைத்து எதிர்க்கட்சிகளையும் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார். அதாவது ஜனநாயகத்தை ஒழிக்க வேண்டும். பா.ஜ.க.வின் நோக்கம் பீகாரில் செயல்படுத்தப்படக் கூடாது என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.